31 December 2016

பாரதியார் கவிதை -பாப்பாப் பாட்டு


பாப்பாப் பாட்டு 

ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா- ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா .

சின்னஞ் சிறுகுருவி போல-நீ 
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ 
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியும்மந்தக் கோழி-அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்த காக்காய்-அதற்கு 
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா-அந்தப் 
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது 
மனிதர்க்குத்  தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை-நெல்லு 
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை 
ஆதரிக்க வேண்டுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,
மாலை முழுவதும் விளையாட்டு -என்று 
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய்ச்சொல்லக் கூடாது பாப்பா-என்றும் 
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா-ஒரு 
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம் 
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர் 
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும்-நாம் 
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம் 
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா-தாய் 
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி-நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் 
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்த்தில் இனியதடி பாப்பா-நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதை 
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம்-அதை 
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் 
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு-நல்ல 
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதை 
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி, உயர்ந்தமதி,கல்வி-அன்பு 
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்-தெய்வம் 
உண்மையென்று தானறிதல் வேணும் ,
வயிர முடைய நெஞ்சு வேணும்-இது 
வாழும் முறைமையடி பாப்பா.