அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே ,
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்து போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும் ,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே,